Thursday, July 10, 2008

சன்மார்க்க சங்கத்தின் முக்கிய கொள்கைகள் கடவுள்

  • கடவுள் ஒருவரே; அவர் ஒளிவடிவினர். அவரை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்க.
  • சிறு தெய்வ வழிபாடு கூடாது; உயிர்ப்பலியிடுதலும் விலக்குக.
  • சாதி, சமய, மத, இன, மொழி, நாடு பாகுபாடுகள் அனுசரித்தல் வேண்டாம்.
  • எல்லா உயிர்களையும் தன்னுயிர்போல் எண்ணும் ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமையைக் கைக்கொள்க.
  • துன்புறும் உயிர்களுக்கு உதவுவதே இறைவழிபாடு.
  • உயிர் இரக்கம் ஒன்றே இறைவனின் பேரருளைப் பெற வழிகோலும்.
  • பசித்தோரின் பசியாற்றுதல் என்னும் ஜீவகாருண்யமே பேரின்ப வீட்டின் திறவுகோல்.
  • புலால் உண்ணுதல் வேண்டாம். ஏனெனில், எல்லா உயிர்களிலும் கடவுள் விளங்குகிறார்.
  • வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் ஆகியவற்றில் இலட்சியம் வைக்க வேண்டாம்.
  • கண்மூடிப் பழக்கவழக்கங்களைக் கைவிடவேண்டும்.காது, மூக்கு குத்துதல் வேண்டாம்.
  • ஆண்களைப் போலவே பெண்களுக்கும் யோகம் முதலிய சாதனங்கள் கற்பிக்க வேண்டும். பேதமற்று, படிப்பு முதலியவையும் சொல்லிக்கொடுக்க வேண்டும்.
  • கணவன் இறந்தால் மனைவியிடம் தாலி வாங்குதல் கூடாது.
    மனைவி இறந்தால் கணவன் மறுமணம் செய்யற்க.
  • இறந்தவர்களைப் புதைக்கவேண்டும்; எரிக்கக்கூடாது.
  • கருமாதி, திதி முதலிய சடங்குகள் செய்யாதீர்; மாறாக, உயிர்நீத்தவர் நினைவில் அன்னதானம் செய்தல் வேண்டும்.
  • மக்கள் எல்லோர்க்கும் பொதுவான வழிபாடு ஜோதிவழிபாடே!
  • உண்மை அன்பால் கடவுள் வழிபாடு செய்து கடவுள் ஒளியை நமக்குள் காண்க.
  • பசித்திரு, தனித்திரு, விழித்திரு.
  • இந்திரிய, கரண, ஜீவ, ஆன்ம, நித்திய ஜீவகாருண்ய ஒழுக்கங்களைக் கடைப்பிடிக்க.
  • ஜீவகாருண்ய ஒழுக்கங்களைக் கடைப்பிடிக்க ஏமசித்தி, சாகாக்கல்வி, தத்துவ நிக்கிரகம் செய்தல், கடவுள்நிலை அறிந்து அம்மயம் ஆதல் ஆகிய நான்கு பேறுகள் கிடைத்து, மரணமிலாப் பெருவாழ்வு பெறுதல் கூடும்.
  • எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டுதல் வேண்டும்.
    எதிலும் பொதுநோக்கம் வேண்டும்.